undefined

கச்சத்தீவு திருவிழா - பக்தர்களுக்கு இந்தியக் கடலோரக் காவல்படை முழு பாதுகாப்பு!

 

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்திலிருந்து சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இந்தியக் கடலோரக் காவல்படை முழுமையான பாதுகாப்பு வழங்கித் தாய்நாடு திரும்பச் செய்துள்ளது. இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பங்கேற்கத் தமிழகத்திலிருந்து சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பை இந்தியக் கடலோரக் காவல்படை உறுதி செய்தது.

பிப்ரவரி 27ம் தேதியன்று ராமேஸ்வரம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து மொத்தம் 3,741 பக்தர்கள் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளில் கச்சத்தீவுக்குப் புறப்பட்டனர். இந்தியக் கடலோரக் காவல்படையினர் தங்களது கப்பல்கள் மற்றும் ரோந்துப் படகுகள் மூலம் பக்தர்களின் படகுகளைப் பாதுகாப்பாகச் சர்வதேசக் கடல் எல்லைக் கோடு (IMBL) வரை அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அவர்கள் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பயணத்தின் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, கடலோரக் காவல்படையின் 'டார்னியர்' விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வான்வழியாகத் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டன. பிப்ரவரி 27 மாலை 5 மணியளவில் அந்தோணியார் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. நெடுந்தீவு பங்குத்தந்தை மற்றும் இந்தியப் பங்குத்தந்தைகள் இணைந்து இவ்விழாவைத் தொடங்கி வைத்தனர்.

இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 7,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்றிணைந்து சிலுவைப் பாதை மற்றும் சிறப்புத் திருப்பலிகளில் பங்கேற்றனர். இரவு முழுவதும் கச்சத்தீவிலேயே தங்கியிருந்த பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை இலங்கை அரசு செய்திருந்தது. திருவிழா நிறைவடைந்ததும், பிார்வரி 28 அன்று மாலை பக்தர்கள் பாதுகாப்பாக ராமேஸ்வரம் திரும்பினர். அவர்களைச் சர்வதேச எல்லையில் இருந்து மீண்டும் இந்தியக் கடலோரக் காவல்படைப் பாதுகாப்பாக அழைத்து வந்தது.

திருவிழாவையொட்டிப் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பக்தர்களின் படகுகள் தடையின்றிச் செல்லவும் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மற்றும் தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 1 வரை 5 நாட்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது திருவிழா முடிந்து பக்தர்கள் அனைவரும் நலமுடன் திரும்பியதைத் தொடர்ந்து, மீனவர்கள் மீண்டும் கடலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர்.