கவின் கொலை வழக்கு... அமைச்சரின் உறுதிமொழிக்குப் பிறகும் தொடரும் பெற்றோர் போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்ட இன்ஜினீயர் கவின் வழக்கில், கைதான சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அவரது பெற்றோர் இரண்டாவது நாளாகத் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவினின் பெற்றோரிடம் தமிழகச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசி, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார். இருப்பினும், எழுத்துப்பூர்வமான உறுதிமொழி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று பெற்றோர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர் - தமிழ்செல்வி தம்பதியின் மகன் கவின் (இன்ஜினீயர்). இவர் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காதலித்ததாகக் கூறி கடந்த ஆண்டு ஜூலை மாதம் நெல்லையில் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாகப் பெண்ணின் சகோதரர் சுர்ஜித், பெற்றோரான சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன் - கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரித்து வரும் இவ்வழக்கில், கைதான சப்-இன்ஸ்பெக்டர் தம்பதிக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை மதுரை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்து உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தும், கொலையாளிகளுக்கு முழுமையான தண்டனை வழங்கக் கோரியும் ஆறுமுகமங்கலத்தில் கவினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த இரண்டு நாள்களாகத் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, ஏரல் வட்டாட்சியர் (தாசில்தார்) ஸ்ரீனிவாசன் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவினின் பெற்றோரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வட்டாட்சியர் தனது செல்போன் மூலம் தமிழகச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அவர்களைக் கவினின் பெற்றோரிடம் பேச வைத்தார்.
பெற்றோரிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திலோ அல்லது மேல்முறையீட்டு மன்றத்திலோ உடனடியாக மேல்முறையீடு செய்வதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எனவே, நீங்கள் இந்தக் காத்திருப்புப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டு அமைச்சா் உறுதியளித்தார்.
அமைச்சர் நிர்மல்குமார் தொலைபேசி வாயிலாகத் தொலைநோக்குடன் கூடிய உறுதியளித்த போதிலும், கவினின் பெற்றோர் போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டனர். அமைச்சரின் வாய்மொழி உத்தரவை மட்டும் நம்பிப் போராட்டத்தை விலக்க முடியாது என்றும், அரசு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்கப்படும் வரை எங்களது காத்திருப்புப் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் தொடர் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.