கவின் ஆணவக் கொலை வழக்கு.. சிறையிலிருந்தே கூலிப்படை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம் - முன்னாள் எஸ்.ஐ சரவணன் பின்னணி!

 

கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முக்கியக் குற்றவாளி சுர்ஜித்தின் தந்தையான முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், சிறையிலிருந்தபடியே மற்றொரு படுகொலை முயற்சியில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம், மாற்றுத்திறனாளி உரிமைச் செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான முருகானந்தம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தேன்மொழி மெட்ரிகுலேஷன் பள்ளித் தாளாளரும் முருகானந்தத்தின் சித்தப்பாவுமான தண்டபாணி என்பவரால் இந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 28 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், முருகானந்தம் கொலை வழக்கின் முக்கியச் சாட்சியான தங்கவேல் என்பவரைக் கடந்த ஜூலை 7-ஆம் தேதி வீட்டருகே வைத்து கூலிப்படையினர் வெட்டிக் கொலை செய்ய முயன்றனர். இதில் படுகாயமடைந்த தங்கவேல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கவின் ஆணவக் கொலை வழக்கில் ஜாமீன் கிடைக்காமல் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் எஸ்.ஐ சரவணனுக்கும், அதே சிறையில் இருந்த தண்டபாணிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சாட்சி தங்கவேலைக் கொலை செய்யத் தண்டபாணியிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, கேரளாவிலிருந்து கூலிப்படையை வரவழைத்துச் சதித்திட்டம் தீட்டியது சரவணன் தான் என்பது விசாரணையில் அம்பலமானது. கூலிப்படையை ஏவி படுகொலை முயற்சிக்குச் சதி செய்த புகாரில் முன்னாள் எஸ்.ஐ சரவணன் மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆணவக் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலும், மற்றொரு படுகொலைக்குக் கூலிப்படையை ஏவிய முன்னாள் காவல் அதிகாரியின் இச்செயல் காவல்துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.