பணத்தை ரெடியா வெச்சுக்கோங்க... மேலும் குறையப் போகும் தங்கம் விலை - பொருளாதார நிபுணர்கள் சொல்வது என்ன?!

 

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று ஒரே நாளில் யாரும் எதிர்பாராத விதமாக சவரனுக்கு ₹5,360 குறைந்துள்ளது. பலரும் தங்கம் விலை குறைய தொடங்கிய இன்ப அதிர்ச்சியில் வாங்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயரத் தொடங்கியது. நேற்றே வாங்கியிருக்கலாம் என்று புலம்புபவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில், இன்னொரு வாய்ப்பு வரப் போகிறது.. பணத்தை ரெடியா வெச்சுக்கோங்க. தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் இந்திய பங்கு சந்தை அதள பாதாளத்திற்கு சரிந்துக் கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், நிலையற்ற வணிகம் காரணமாக தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

பொதுவாகப் போர்ச் சூழல் நிலவும்போது பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலை உயரும். ஆனால், தற்போது சர்வதேசச் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கத்தை விடுத்து கச்சா எண்ணெய் மற்றும் டாலர் பத்திரங்கள் மீதான முதலீடுகளை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் மீதான தேவை தற்காலிகமாகக் குறைந்து விலை சரிந்துள்ளது.

இது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், "வரும் நாட்களில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு மேலும் ₹2,000 முதல் ₹4,000 வரை குறையக்கூடும். ஆனால், போர்ச் சூழல் தணிந்து முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கம் பக்கம் திரும்பும்போது, விலை இதற்கு முன்பு இருந்ததை விட மிக உச்சமான நிலைக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம்" என்று எச்சரித்துள்ளார்.

சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை குறைந்திருக்கிறது. சர்வதேசப் பொருளாதார மாற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களே இந்தத் திடீர் சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.  அதனால் எல்லோருடைய பார்வையும் கச்சா எண்ணெய் பக்கம் திரும்பியுள்ளதால், தங்கத்தின் விலை  மேலும் குறையவே வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.