கேரளாவில் போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை - ஏடிஜிபி உத்தரவு!

 

தொடர் பணிச்சுமை மற்றும் கடுமையான மன உளைச்சலில் இருந்து காவலர்களை விடுவிக்கும் நோக்கில், கேரளாவில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை வழங்கி அம்மாநில சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி பி. விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

காவல் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை போலீசாருக்கும், அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை முன்கூட்டியே திட்டமிட்டு வழங்கப்பட வேண்டும்.

காவல் நிலையப் பொறுப்பதிகாரி அல்லது சப்-இன்ஸ்பெக்டர் வாராந்திர விடுமுறையில் செல்லும்போது, நிலையத்தின் தினசரி பொறுப்புகளைத் தற்காலிகமாக மற்றொரு தகுதியான அதிகாரியிடம் முறைப்படி ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் மன அமைதியை உறுதி செய்யும் வகையில், குழந்தைகளின் பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட முக்கியமான குடும்ப நிகழ்வுகளின்போது அவர்களுக்கு விடுமுறை மறுக்கப்படாமல் வழங்கப்பட வேண்டும். அவசரச் சட்டம்-ஒழுங்குப் பணிகள் தவிர மற்ற நேரங்களில் இதற்கு உயர் அதிகாரிகள் தடை விதிக்கக் கூடாது.

தொடர் பணியால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைத்து, போலீசார் தங்களது குடும்பத்தினருடன் போதிய நேரத்தைச் செலவிட இந்தச் சுற்றறிக்கை பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரள காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் அம்மாநில போலீசார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.