கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்: பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

 

தென்னக மாநிலங்களின் நீர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், கோதாவரி – காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவித்து விரைந்து செயல்படுத்தக் கோரிப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு இயல்பாகவே மேற்பரப்பு நீர் வளங்களில் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக உள்ளது. தன் நீர்த் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு அண்டை மாநிலங்களையே நம்பியுள்ளது.

மாநில அரசால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், நிலத்தடி நீர் கவலைக்கிடமான முறையில் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய வறட்சியால் பாதிக்கப்படும் தென் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்கு இத்திட்டமே நிரந்தரத் தீர்வாகும்.

தேசிய நீர் மேம்பாட்டு முகமை தயாரித்துள்ள தற்போதைய விரிவான திட்ட அறிக்கை, காவிரி ஆற்றிற்குச் சில கிலோமீட்டர் முன்னதாகவே முடிவடைகிறது. அதற்குப் பதிலாக, காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கட்டளைக் கதவணை வரை இந்த இணைப்பை நீட்டிக்க வேண்டும்.

சமூகப் பொருளாதார நன்மைகளைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்திற்கு "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்" என்ற அந்தஸ்தை வழங்கி, விரைவுப் பாதையில் செயல்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இணைந்து திட்டத்தைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப் பிரத்யேக 'சிறப்பு நோக்கு அமைப்பை' உருவாக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளைக் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் மூலம் பேசித் தீர்க்க ஜல்சக்தி அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். கட்டளைக் கதவணை வரை இணைப்பை நீட்டிப்பதற்கான புதிய டிபிஆர்-ஐ உடனடியாக இறுதி செய்ய வேண்டும். இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான முழு ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் வழங்கத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.