கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனமாடினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
கோவில் திருவிழாக்களின் போது கரகாட்டம் என்ற பெயரில் ஆபாசமாக உடை அணிந்து நடனமாடினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாமாக முன்வந்து எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம், பாப்பாத்தம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கரகாட்ட நிகழ்ச்சி நடத்தக் காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், "கரகாட்டம் ஆடும் பெண்களின் உடைகள் மிகவும் ஆபாசமாக இருக்கின்றன. இதுபோன்ற ஆபாச நடனங்களை எவ்வாறு அனுமதிக்க முடியும்?" எனத் தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.
காவல்துறை தரப்பில் அரசியல் ரீதியான கூச்சல்கள் எழ வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த நீதிபதி, "அரசியல் பேச அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் ஆபாச நடனத்திற்கு அனுமதி தர முடியாது" எனக் குறிப்பிட்டார். ஏற்கனவே பக்கத்து கிராமங்களில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்று, உடையார்பாளையம் கோவில் திருவிழாவிற்கும் கரகாட்டம் நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டது.
இருப்பினும், கரகாட்டக் கலைஞர்கள் ஆபாச உடை அணிந்து ஆடக் கூடாது என்றும், அவ்வாறு ஆபாசமாக ஆடினால் காவல்துறையினர் உடனடியாகச் சட்டப்படி நடவடிக்கை எடுத்து அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார்.