கேரளா உள்துறை அமைச்சர் இன்று முதலமைச்சர் விஜயுடன் அவசர ஆலோசனை!
தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதன் பயன்பாட்டை ஒட்டுமொத்தமாக ஒடுக்குவது குறித்து கூட்டு நடவடிக்கை எடுப்பதற்காக, கேரளா மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதிகள் வழியாக நடைபெறும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த இரு மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இந்த உயர்மட்டச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களில் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கை வேரோடு அறுப்பது மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பது குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழ்நாடு-கேரளா எல்லைச் சோதனைச் சாவடிகளில் இரு மாநிலப் போலீசாரும் இணைந்து கூட்டுக் கண்காணிப்பில் ஈடுபடுவது மற்றும் கடத்தல்காரர்களைக் கண்டறியப் புதிய வியூகங்களை வகுப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தப் பின்வரும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் சர்வதேசக் கடத்தல் தொடர்புகள் குறித்த உளவுத்துறைத் தகவல்களை இரு மாநிலங்களும் உடனுக்குடன் பரிமாறிக் கொள்வதற்கான பிரத்யேகக் கட்டமைப்பை ஏற்படுத்துதல்.
எல்லையோரக் மாவட்டங்களில் உள்ள காவல்துறையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தங்களுக்குள் சட்ட ரீதியான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.