தண்டவாளத்தில் சிக்கிய கார்... ரெயில் வரும் எச்சரிக்கை மணி ஒலித்ததும் பயணிகள் தப்பியோட்டம்!

 

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் தண்டவாளத்தில் சிக்கிய நிலையில், ரெயில் வரும் எச்சரிக்கை மணி ஒலித்ததால் காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.கண்ணூர் பகுதியில் ரெயில்வே கிராசிங் கேட் மூடிக்கொண்டிருந்தபோது அந்த வழியாக கார் ஒன்று வந்துள்ளது. முன்னால் சென்ற வாகனத்தை கடந்து செல்ல முயன்றபோது, காரின் முன்சக்கரங்கள் தண்டவாளத்தின் பள்ளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

காரை அங்கிருந்து நகர்த்த ஓட்டுநர் முயன்றுள்ளார். அப்போது காரில் இருந்து புகை வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கார் நகர முடியாமல் தண்டவாளத்திலேயே சிக்கிக்கொண்டது.இந்த நிலையில், அந்த வழித்தடத்தில் ரெயில் வருவதற்கான எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்தவர்கள் உடனடியாக வாகனத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.

தண்டவாளத்தில் கார் சிக்கியிருப்பது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வரவிருந்த ரெயிலை முந்தைய நிலையத்திலேயே நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே பொதுமக்கள் காரை தண்டவாளத்தில் இருந்து அகற்ற முயன்றனர். ஆனால் முடியாததால் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கிரேன் உதவியுடன் காரை தண்டவாளத்தில் இருந்து அகற்றினர்.இந்த சம்பவத்தால் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து சுமார் 30 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. ரெயில் வருவதற்கு முன்பாக காரில் இருந்தவர்கள் வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.