காதலனின் உயிருக்கு குறிவைத்த காதலி? நண்பர்களுடன் சேர்ந்து தாக்குதல் !
கேரள மாநிலம் பாலக்காடு அருகே, காதலனைக் கொலை செய்ய முயன்றதாக இளம்பெண் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகேயுள்ள பெருமொடியூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஷபானா (19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால், காதலன் தன்னைச் சுதந்திரமாகச் செயல்பட விடாமல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஷபானா, அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதற்காகத் தனது தோழி நாதியா (20) மற்றும் அவரது நண்பர்களான ரபிபா (25), இர்ஷாத் (28), அசாருதீன் (25) ஆகியோரின் உதவியை ஷபானா நாடியுள்ளார்.
இதற்கிடையே, ஷபானாவை அழைத்துச் செல்ல காரில் வந்த காதலனையும், அவருடன் இருந்த நண்பரையும் அந்தக் கும்பல் காருக்குள்ளேயே வைத்து கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் நள்ளிரவில் தாழே பாலம் சாலையில் இருவரையும் காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு தப்பியுள்ளனர்.
காயமடைந்த இருவரையும் மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஷபானா உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். இந்தச் சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.