இன்ஸ்டாவால் விபரீதம்... பிளஸ் 2 மாணவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காணாமல் போன 17 வயது பிளஸ் 2 மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இளம்பெண் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.திருவனந்தபுரம் பாங்கப்பாறை பகுதியைச் சேர்ந்த அபிராம், கடந்த நவம்பர் 1-ம் தேதி நண்பரைச் சந்திக்கச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால், பெற்றோர் ஸ்ரீகாரியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடியபோது, பாங்கப்பாறையில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் சாக்குப்பையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், இன்ஸ்டாகிராம் தொடர்பு மற்றும் காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முன்விரோதம் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. 17 வயது சிறுவன், 18 வயது இளம்பெண் மற்றும் 21 வயதுடைய ஒருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவரை இன்ஸ்டாகிராம் மூலம் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து கொலை செய்ததாகவும், உடலை மறைக்க உதவியதாகவும் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா, கொலைக்கான முழுப் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.