கேரளாவுக்கு முதன்முறையாக ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ கிரீடம் - 64 ஆண்டுகால வரலாற்றில் சாதனை!

 

64 ஆண்டுகால 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா' வரலாற்றில் முதன்முறையாகக் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த மதிப்புமிக்க கிரீடத்தைக் கைப்பற்றிப் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கராவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியான கெசியா லிஸ் மேஜோ என்ற இளம் பெண் இந்தச் சாதனையைச் செய்துள்ளார். சிறு வயதில் தனது தாயுடன் 'பேபி ஷோக்களில்' கலந்து கொண்டதன் மூலம் தொடங்கிய இவருடைய பயணம், 'மிஸ் டீன் இந்தியா' போட்டியின் மூலம் மாடலிங் துறையில் அடுத்தகட்டத்தை எட்டியது.

"பல ஆண்டுகாலக் கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு இது. இந்த ஓணம் பண்டிகைக் காலத்தில் என் சொந்த மாநிலமான கேரளாவிற்கு என்னால் கொடுக்க முடிந்த மிகச் சிறந்த பரிசு இந்தக் கிரீடம் தான்" எனக் கெசியா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் கலாச்சாரம் மற்றும் தனிச்சிறப்புகளைச் சர்வதேச அளவில் கொண்டு சேர்ப்பதே தனது முதன்மை இலக்கு என்று கூறியுள்ளார். எத்தனை உயரங்களை தொட்டாலும் மலையாளி என்பதில் பெருமை கொள்ளும் இவருக்குச் சோறு, மோர்க்குழம்பு, சட்னி மற்றும் முட்டை ஆகியவை மிகவும் பிடித்த உணவாகும். வடஇந்தியாவைச் சேர்ந்த சக ஊழியர்களுக்கு மலையாள மொழியையும் கற்றுக்கொடுத்து வருகிறார்.

"ஒரு பெரிய கனவைக் கண்டு, அதை நனவாக்குவதற்காக உண்மையான விடாமுயற்சியுடன் உழைக்கத் தயாராக இருந்தால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை" என்ற செய்தியை இளைஞர்களுக்கு வழங்கியுள்ள கெசியா, விரைவில் சர்வதேச 'மிஸ் யுனிவர்ஸ்' போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.