அமெரிக்காவில் 2 தோழிகள் அடுத்தடுத்து பலி... கேரள பெண் மீது இரட்டை கொலைக் குற்றச்சாட்டு!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரே நாளில் 2 தோழிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு மரணங்களுக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த பெண் மீது 2 கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கேரளாவின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த அனிலா பேபி என்பவர் அமெரிக்காவின் மில்பிடாஸ் பகுதியில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் நட்பில் இருந்த அஞ்சனா ஹரி மற்றும் ஆன் மேரி மேத்யூ ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
மில்பிடாஸ் குடியிருப்பு வளாகத்தில் அஞ்சனா ஹரி கார் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக போலீஸ் விசாரணையில் சந்தேகம் எழுந்தது.இதற்கிடையே, சில மணி நேரங்களுக்குப் பிறகு சான் ஜோஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஆன் மேரி மேத்யூ சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு கத்திக்குத்து காயம் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இரு சம்பவங்களையும் விசாரித்த போலீசார், அனிலா பேபியை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தற்போது அவர் மீது 2 கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மூன்று பெண்களும் சம்பவத்திற்கு முந்தைய நாள் ஓணம் கொண்டாட்டத்தில் ஒன்றாக பங்கேற்று, பின்னர் திரைப்படம் பார்த்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த இரட்டை மரணங்களுக்கான காரணம் என்ன என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.