படுக்கை அறையில் பயங்கரம்... தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்துப் பலி... அண்ணன் உயிருக்கு ஊசலாட்டம்!

 

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சூர் கொடாலி பகுதியைச் சேர்ந்த சில்ஜோ - ஜான்சி தம்பதியின் மகன்கள் அனோத் (10) மற்றும் ஆல்ஜோ (8). நேற்று முன்தினம் இரவு மகன்கள் இருவரும் தங்களது அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் இளைய மகன் ஆல்ஜோ தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், வாந்தி வருவது போல் இருப்பதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

allowfullscreen

அவர்கள் ஒரு விசேஷத்திற்குச் சென்று வந்ததால், குளிர்பானம் குடித்ததால் ஏற்பட்ட 'புட் பாய்சன்' (Food Poisoning) என்று கருதிய பெற்றோர்கள், அவனுக்குச் சுடுதண்ணீர் கொடுத்து மீண்டும் தூங்க வைத்துள்ளனர். ஆனால் அதிகாலையில் எழுப்பியபோது ஆல்ஜோ பேச்சு மூச்சின்றி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவனை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், இது உணவு நச்சல்ல, பாம்பு கடி என்று உறுதி செய்தனர். துரதிர்ஷ்டவசமாக ஆல்ஜோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையில் அவனது அண்ணன் அனோத்தும் இதே போன்ற அறிகுறிகளுடன் மயங்கிய நிலையில், அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்பின் உறவினர்கள் வீட்டிற்குச் சென்று சோதனையிட்டபோது, சிறுவர்கள் படுத்திருந்த தலையணைக்கு அடியில் 2 அடி நீளமுள்ள 'கட்டுவிரியன்' பாம்பு சுருண்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கோடை வெப்பம் தாங்காமல் வீட்டின் ஜன்னல் வழியாகப் பாம்பு உள்ளே நுழைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் பலியானதும், மற்றொருவர் உயிருக்குப் போராடி வருவதும் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.