பாஜக கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார் கேரளத்தின் முதல் பெண் டிஜிபி ஆர்.ஸ்ரீலேகா!

 

கேரளாவின் முதல் பெண் காவல்துறை முன்னாள் டிஜிபியும், திருவனந்தபுரம் மாநகராட்சியின் சாஸ்தமங்கலம் வார்டு பாஜக கவுன்சிலருமான ஆர்.ஸ்ரீலேகா தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது. அத்தேர்தலில் சாஸ்தமங்கலம் வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்டு ஆர்.ஸ்ரீலேகா கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தலில் பாஜக வெற்றி பெற்றபோது ஆர்.ஸ்ரீலேகா மேயர் ஆவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வி.வி.ராஜேஷ் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அவர் கட்சியில் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட அசவுகரியங்கள் காரணமாகவே தான் பதவியில் இருந்து விலகுவதாக ஆர்.ஸ்ரீலேகா தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக மேயர் வி.வி.ராஜேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த ராஜினாமாவால் 101 உறுப்பினர்களைக் கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜகவின் பலம் 51-ல் இருந்து 50 ஆகக் குறைந்துள்ளது.