முக்கிய ஆலோசனை... இன்று தவெக அனைத்து எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு!
இன்று சென்னை பனையூரில், தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கும் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கை முடிவுகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிப்பதற்காக இந்த உயர்மட்டக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இன்று ஜூன் 11ம் தேதி மாலை 3 மணியளவில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமை தாங்குகிறார். கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக ரீதியான பல மாற்றங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
சமீபத்தில் அதிமுக போன்ற மாற்று கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணைந்த மூத்த தலைவர்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்புகள், கட்சியின் அடுத்தகட்ட அரசியல் செயல்பாடுகள் மற்றும் உட்கட்சி அமைப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
தமிழக முதலமைச்சரும், தவெக கட்சித் தலைவருமான விஜய் நேற்று டெல்லி கிளம்பிச் சென்றுள்ள நிலையில், விஜய் முன்னிலையின்றி, பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைவர் டெல்லியில் இருக்கும் வேளையில், சென்னையில் தவெகவின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அவசரமாகக் கூடி விவாதிக்கவிருப்பது அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.