கெட்டுப்போன கோழி இறைச்சி விற்பனை...பிரபல KFC கடைக்கு சீல்!
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் அமைந்துள்ள பிரபல கேஎப்சி உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய உணவில் துர்நாற்றம் வீசிய கெட்டுப்போன கோழி இறைச்சி வழங்கப்பட்டதாக வந்த புகாரை அடுத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அதிகாரிகள் உடனடியாக அந்த உணவகத்தில் தீவிரமான சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின்போது உணவகத்தின் சமையலறை மற்றும் குளிர்சாதனப் பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் அங்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்களைப் பரிசோதித்தனர். பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன இறைச்சி மற்றும் சமையல் எண்ணெய் மாதிரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த உணவகத்தின் கிடங்குப் பகுதி உடனடியாகப் பூட்டிச் சீல் வைக்கப்பட்டதுடன் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருள்களின் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வுக் முடிவுகள் வந்த பிறகு சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது மேலதிகமான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் உணவகங்களில் இதுபோன்ற சுகாதாரக் குறைபாடுகள் ஏற்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.