காதலியால் சிக்கிய கடத்தல் தலைவன்... மெக்சிகோவில் 25 வீரர்கள் பலி - நாடு முழுவதும் வன்முறை!
மெக்சிகோவில் மிகவும் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாடு முழுவதும் வெடித்துள்ள வன்முறைச் சம்பவங்கள் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெக்சிகோவின் மிகவும் சக்திவாய்ந்த 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்' (CJNG) அமைப்பின் தலைவன் நெமேசியோ ஒசெகுவேரா செர்வான்டெஸ், 'எல் மென்சோ' (El Mencho) என்று பரவலாக அறியப்பட்டவர், ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டார்.
ஜாலிஸ்கோ மாநிலத்தின் தபால்பா பகுதியில் உள்ள ஒரு மறைவிடத்தில் எல் மென்சோ இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் மெக்சிகோ ராணுவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிரடிச் சோதனையை மேற்கொண்டது. ராணுவத்தினருடன் ஏற்பட்ட கடும் துப்பாக்கிச் சூட்டில் எல் மென்சோ காயமடைந்தார். அவரை மேல் சிகிச்சைக்காக மெக்சிகோ சிட்டிக்கு விமானம் மூலம் அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்ததாக ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்க அரசு இவரது தலைக்கு 15 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எல் மென்சோ கொல்லப்பட்ட செய்தி வெளியானதும், அவரது ஆதரவாளர்கள் மெக்சிகோ முழுவதும் வெறிச்செயல்களில் ஈடுபட்டனர். சுமார் 20 மாநிலங்களில் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல், வாகனங்களுக்குத் தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மெக்சிகோ பாதுகாப்புச் செயலாளர் உமர் கார்சியா ஹார்ஃபுச் வெளியிட்டுள்ள தகவலின்படி: கார்டெல் கும்பலின் தாக்குதல்களில் இதுவரை 25 தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ராணுவத் தரப்பில் ஒரு சிறைக்காவலர் மற்றும் மாநில அரசு வழக்கறிஞர் அலுவலக அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டனர். பதிலடித் தாக்குதலில் சுமார் 30 குற்றவாளிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
வன்முறை காரணமாக மெக்சிகோவின் பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குவாடலஜாரா (Guadalajara) போன்ற முக்கிய நகரங்களில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் தங்களது குடிமக்களுக்குப் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் (Claudia Sheinbaum) மக்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.