19 வயதில் உலக சாதனை - பார்முலா 1 கார் பந்தயத்தில் கிமி அன்டோனெல்லி வெற்றி! 

 

மெர்சிடிஸ் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திரமான கிமி அன்டோனெல்லி, ஜப்பானின் சுசூகா ஓடுதளத்தில் நடைபெற்ற 2026ம் ஆண்டின் 3வது சுற்றுப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

பந்தயத்தின் தொடக்கத்தில் 'போல் பொசிஷன்' இடத்திலிருந்து கிளம்பிய கிமி, எதிர்பாராத விதமாக 6-வது இடத்திற்குப் பின் தள்ளப்பட்டார். மெக்லாரன் அணியின் ஆஸ்கார் பியாஸ்ட்ரி தொடக்கத்தில் முன்னிலை வகித்தார். பந்தயத்தின் பாதியில் 'சேஃப்டி கார்' பயன்படுத்தப்பட்ட சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கிமி, சரியான நேரத்தில் டயர்களை மாற்றி மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்.

மொத்தம் 307.471 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தப் பந்தயத்தை 1 மணி நேரம் 28 நிமிடங்கள் 03.403 விநாடிகளில் கடந்து அவர் முதலிடம் பிடித்தார். கடந்த முறை சீனாவில் நடந்த பந்தயத்திலும் வெற்றி பெற்ற கிமி, தற்போது ஜப்பானிலும் வென்று 'பேக்-டு-பேக்' வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

தனது 19 வயது, 6 மாதம், 28 நாட்களில் உலக சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்ததன் மூலம், லூயிஸ் ஹாமில்டன் (22) மற்றும் செபாஸ்டியன் வெட்டல் ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் 25 புள்ளிகளைப் பெற்ற கிமி, தற்போது 72 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.