கொடைக்கானல் மலைச்சாலையில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள சரக்கு வாகனங்கள் செல்லத் தடை!
கொடைக்கானல் மலைச் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், 12 மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல டிசம்பர் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட நீள வரம்பை மீறும் சில வகை ஆம்னி பேருந்துகள், டாரஸ் லாரிகள் மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் கொடைக்கானல் மலைச் சாலையில் பயணிக்க முடியாது.
இதனால் கொடைக்கானலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சாதாரண நீளம் கொண்ட பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அதேநேரத்தில், கார்கள் மற்றும் வேன்களுக்கு இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மலைப்பாதையில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பதால் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும், பயணத்தைச் சீராக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 1 முதல் கொடைக்கானலுக்குப் பேருந்து அல்லது சரக்கு வாகனத்தில் செல்லத் திட்டமிடுபவர்கள், வாகனத்தின் நீள வரம்பைக் கவனத்தில் கொண்டு பயணத்தைத் திட்டமிடுவது அவசியம்.