கொடைக்கானல் வனப்பகுதியில் திடீர் அச்சம்... வனத்துறையினரை விரட்டிய காட்டு யானை!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரை காட்டு யானை ஒன்று துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வனப்பகுதியில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கு வந்த காட்டு யானையை எதிர்கொண்டுள்ளனர். இதனால் ஆவேசமடைந்த யானை, வனத்துறையினரை நோக்கி வேகமாக விரட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
யானை துரத்தியதால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், உடனடியாக அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். அப்போது மரத்தின் மீது இருந்த வனத்துறை அதிகாரி ஒருவர், யானை துரத்தும் காட்சியைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வனப்பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது.