சாலை விரிவாக்கத்திற்காகக் கோவில் இடித்தபோது கோபுரம் சரிந்து அரசு ஊழியர் பரிதாபப் பலி.. பகீர் வீடியோ!

 

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலி மாவட்டத்தின் பண்டிட் தீனதயாள் உபாத்யா நகரில் சாலை விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிக்காக அங்குள்ள பல ஆண்டுகள் பழமையான காளி கோவில் நிர்வாகத்தின் ஒப்புதலுடன் சிலைகள் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டன. அதன் பின்னர் புல்டோசர் இயந்திரம் மூலம் கோவிலின் பெரிய கோபுரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் எளிய முறையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாகக் கோவிலின் பெரிய கோபுரம் திடீரென சரிந்து புல்டோசர் மீது பலமாக மோதி இடிபாடுகள் அங்கும் இங்கும் உருண்டன. அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடிய போதிலும், பொதுப்பணித்துறை ஊழியரான பல்தேவ் யாதவ் என்பவர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். பலத்த காயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதும், அவர் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் மற்றொரு ஊழியர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் துயரச் சம்பவத்தின் காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து அங்குக் கோவில் இடிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பணியின் போது உரியப் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.