கோயில் திருவிழாவில் இருவர் வெட்டிக் கொலை!

 

காஞ்சிபுரம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லி கிராமத்தில் ஆடி மாதத்தையொட்டி 3 நாட்கள் நடக்கும் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாள் திருவிழாவின்போது சுவாமி ஊர்வலம் சென்றுகொண்டிருந்த வேளையில் மதுபோதையில் இருந்த சிலர் கானா பாடல் போடுமாறு தகராறு செய்துள்ளனர்.

இதற்கு அங்கிருந்தவர்கள் மறுப்புத் தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்தது. உடனே இது குறித்துக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதால் அந்தக் கும்பல் அங்கிருந்து உடனடியாகச் சென்றுவிட்டது. சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கு வந்த அதே போதைக்கும்பல் முன்பகை காரணமாக சந்துரு மற்றும் விக்கி என்கின்ற நீலகண்டன் ஆகிய இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் திருவிழாவில் நடைபெற்ற இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் பீதியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.