வெண்டிலேட்டர் சிகிச்சையில் கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு... 50 நாட்களாக நீடிக்கும் மர்மம்.... வெளியாகும் தகவல்களால் தொண்டர்கள் குழப்பம்!
சென்னையின் முக்கியத் தொகுதிகளுள் ஒன்றான கொளத்தூர் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ்.பாபு, தீவிர மூச்சுத்திணறல் காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகச் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது தற்போதைய உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் முரண்பாடான தகவல்களால் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, 75 வயதான வி.எஸ்.பாபுவுக்கு திடீரெனக் கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாகச் சென்னை அமைந்தக்கரையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் அனுமதிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
எனினும், கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதிக்குப் பிறகு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவரது உடல்நிலை குறித்து புதிய அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. 40 நாட்களுக்கும் மேலாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வராதது ஆதரவாளர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.
வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும் அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "வி.எஸ்.பாபுவின் உடல்நிலை நன்றாகத் தேறி வருகிறது; அவர் நலமுடன் உள்ளார்" என்று தெரிவித்து, வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர்.
சமீபத்தில் அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகப் புதிய தகவல்கள் பரவி வருவதால், ஏற்கனவே அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளுடன் இது முரண்படுவதாக ஆதரவாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரத்தில், நோயாளியின் மருத்துவத் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற போதிலும், வி.எஸ்.பாபு மக்கள் பிரதிநிதி என்பதால் மருத்துவமனை நிர்வாகமோ அல்லது அவரது குடும்பத்தினரோ உடனடியாக ஒரு தெளிவான அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு நிலவும் ஊகங்களுக்கும் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே ஆதரவாளர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.