கொல்கத்தாவில் ‘மூளை உண்ணும் அமீபா’ பாதிப்பு - நீர்நிலைகளை ஆய்வு செய்ய உத்தரவு - 90% மரண அபாயம் கொண்ட ‘பாம்’ நோய்!
தெற்கு கொல்கத்தாவில் ஒருவருக்கு அரிய வகை 'பிரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்' பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
'நெக்லீரியா ஃபோலரி' எனப்படும் இந்த அமீபா, பொதுவாக வெதுவெதுப்பான நன்னீர் நிலைகளான குளம், ஏரி மற்றும் ஆறுகளில் காணப்படும். குளிக்கும்போது அல்லது முகம் கழுவும்போது மூக்கு வழியாக உள்ளே நுழையும் இந்த அமீபா, நேரடியாக மூளையைச் சென்றடைந்து திசுக்களை அழிக்கத் தொடங்குகிறது. இதைக் கண்டறிவது கடினம் என்பதால், இதில் பாதிக்கப்படுபவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்க நேரிடும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
தெற்கு கொல்கத்தாவில் பாதிப்பு கண்டறியப்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள பொதுக் குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் பூங்காக்களில் உள்ள நீர்நிலைகளை உடனடியாக ஆய்வு செய்ய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. முறையாகப் பராமரிக்கப்படாத நீச்சல் குளங்கள் மற்றும் தேங்கியுள்ள நீர்நிலைகளில் குளோரின் அளவைச் சரிபார்க்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் தேங்கியுள்ள நீர்நிலைகளில் குளிப்பதையும், தண்ணீரை மூக்கிற்குள் இழுப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
காய்ச்சல், கடுமையான தலைவலி, வாந்தி மற்றும் கழுத்து விறைப்பு ஆகியவை இதன் ஆரம்ப அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும், நீர்நிலைகளுடன் தொடர்பு இருந்த விபரத்தைக் கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளாவில் இத்தகைய பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது கொல்கத்தாவிலும் இது பரவத் தொடங்கியிருப்பது சுகாதாரத் துறைக்குச் சவாலாக மாறியுள்ளது.