கொல்கத்தா பாலியல் பலாத்காரம்... உயிரிழந்த கல்லூரி மாணவியின் தாயார் வேட்புமனு தாக்கல்!
மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் ரத்னா தேப்நாத் தற்போது நேரடி அரசியலில் களமிறங்கியுள்ளார்.
நாடு முழுவதையும் உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் ரத்னா தேப்நாத், வரும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) சார்பில் போட்டியிடுகிறார்.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பனிஹாடி சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக ரத்னா தேப்நாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான வேட்புமனுவை முன்னாள் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி முன்னிலையில் அவர் நேற்று அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிரிதி இரானி, "நீதி, மரியாதை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்காகப் போராடி வரும் வங்காளத்தின் ஒவ்வொரு பெண்ணின் குரலாக ரத்னா தேப்நாத் இன்று நிற்கிறார்."
"திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் ரத்னா தேப்நாத் தொடர்ந்து அவமதிப்புக்கும், இரக்கமற்ற துன்புறுத்தலுக்கும் ஆளாகி வருகிறார். ஊழல் மற்றும் வெற்று வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ள வங்காள மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்."
கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மாநில போலீசாரின் விசாரணையில் அதிருப்தி ஏற்பட்டு, கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. நீதி வேண்டி மருத்துவர்கள் நடத்திய நீண்ட போராட்டத்தின் தொடர்ச்சியாக, தற்போது அந்த மாணவியின் தாயாரே மக்கள் மன்றத்தில் நீதியைக் கோரித் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.
ரத்னா தேப்நாத் வேட்புமனு தாக்கல் செய்தபோது திரளான பொதுமக்கள் அவருக்கு ஆதரவாகத் திரண்டது பனிஹாடி தொகுதியில் பெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.