நாளை  முதல் கொல்லி மலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை... மீறினால் ரூ1,00,000/- அபராதம்!

 

 

நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கொல்லிமலையில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை அக்.2-ம் தேதி முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது.கொல்லிமலை பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த தடையை மீறி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து, விநியோகித்து அல்லது விற்பனை செய்தால் முதல் முறையாக ரூ.25 ஆயிரமும், 2-வது முறையாக ரூ.50 ஆயிரமும், 3-வது முறையாக ரூ.1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், பெரிய வணிக நிறுவனங்களுக்கு முதல் முறை ரூ.10 ஆயிரம் முதல் 3-வது முறை ரூ.25 ஆயிரம் வரையும், மளிகை மற்றும் மருந்துக் கடைகள் போன்ற நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.5,000 வரையும் அபராதம் விதிக்கப்படும். சிறு வணிகர்களுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை படிப்படியாக அபராதம் விதிக்கப்படும்.

கொல்லிமலைக்கு செல்லும் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை கண்காணித்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் கொல்லிமலைக்கு சுற்றுலா செல்லும் பொதுமக்கள் மற்றும் பயணிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.