49 ஆண்டுகளாக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கிராமம்! பறவைகளுக்காக நெகிழ்ச்சி !
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கொள்ளுகுடிப்பட்டி கிராம மக்கள், இயற்கையையும் பறவைகளையும் பாதுகாக்கும் வகையில் கடந்த 49 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்து வருகின்றனர்.
இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில் பல்வேறு பறவைகள் தங்கி வருகின்றன. தீபாவளி நாளில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் அதிகப்படியான சத்தம் பறவைகளுக்கு இடையூறாக இருக்கக்கூடும் என்பதால், அவற்றின் நலனைக் கருத்தில் கொண்டு கிராம மக்கள் இந்த வழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.
கிராம மக்களுக்கு வனத்துறையினர் பாராட்டு
பறவைகளின் பாதுகாப்புக்காக பல ஆண்டுகளாகத் தியாக உணர்வுடன் இந்த நடைமுறையைப் பின்பற்றி வரும் கிராம மக்களைப் பாராட்டும் வகையில் வனத்துறையினர் இனிப்புகள் வழங்கினர். மேலும், அவர்களுக்குத் தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
பண்டிகைக் கொண்டாட்டத்திலும் பறவைகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கொள்ளுகுடிப்பட்டி கிராம மக்களின் இந்தச் செயல் பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.