காங். தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் செல்வப்பெருந்தகை... பெங்களூருவில் கார்கேவை சந்தித்து கோரிக்கை!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு செல்வப்பெருந்தகை, அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னரே எடுத்த முடிவு: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, தார்மீகப் பொறுப்பேற்றுத் தனது தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகச் செல்வப்பெருந்தகை கட்சியின் அகில இந்தியத் தலைமைக்குத் தூது அனுப்பியிருந்தார். இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு அவசரமாகச் சென்றுள்ள செல்வப்பெருந்தகை, அங்கு தங்கியிருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தன்னைத் தலைவர் பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவித்து, கட்சியின் சாதாரணத் தொண்டனாகப் பணியாற்ற அனுமதிக்குமாறு முறைப்படி கடிதம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுப் பொறுப்பேற்றுள்ள சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு அங்கு மிக முக்கிய அரசியல் பங்கு உள்ளதாகக் கட்சியின் டெல்லி மேலிடம் கருதுகிறது: தற்போதைய புதிய தவெக அரசிற்குத் தமிழக காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் நிலையில், இந்நிலையில் மாநிலத் தலைமையை மாற்றினால் அது தேவையற்ற குழப்பங்களை உருவாக்கும் என மல்லிகார்ஜூன கார்கே கவலை தெரிவித்துள்ளார். எனவே, செல்வப்பெருந்தகையின் ராஜினாமா கோரிக்கையை உடனடியாக ஏற்க மறுத்த கார்கே, "தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் சுமுகமடையும் வரை சிறிது காலம் பொறுத்திருக்குமாறு" அவரிடம் அறிவுறுத்தியுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணிக் கட்சிகளுக்குள் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், பிரதான தேசியக் கட்சியான காங்கிரஸின் மாநிலத் தலைவரே பதவி விலகத் துடிப்பதும், அதை டெல்லி மேலிடம் தடுத்து நிறுத்தி வைப்பதும் சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சந்திப்பை முடித்துக் கொண்டு இன்று இரவு சென்னை திரும்பும் செல்வப்பெருந்தகை, நாளை செய்தியாளர்களைச் சந்தித்து இது குறித்து விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.