பெண்ணிடம் அத்துமீறியதாக புகார்... தவெக நிர்வாகி பிரகாஷ் கட்சியில் இருந்து நீக்கம்!
கோவை தொண்டாமுத்தூர் அருகே இருசக்கர வாகன ஷோரூமில் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு அத்துமீறியதாகப் புகார் எழுந்த நிலையில், தவெக நிர்வாகி பிரகாஷை கட்சியில் இருந்து நீக்கி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், தவெக நகரச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். இவர், தொண்டாமுத்தூர் அருகே உள்ள இருசக்கர வாகன ஷோரூமுக்குச் சென்று, அங்கு பெண்ணிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெண்ணின் கணவர் ஷோரூமில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், நடந்தவற்றை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, புகாருக்கு உள்ளான வேடப்பட்டி நகரச் செயலாளர் பிரகாஷை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்குவதாக தவெக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கட்சியின் இந்த நடவடிக்கை கோவை அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.