சோகத்தில் முடிந்த மேலாளர் வாழ்க்கை...  கோவை விமான நிலைய பெண் அதிகாரி தற்கொலை!

 

கோவை விமான நிலையத்தில் சிவில் என்ஜினீயரிங் பிரிவில் மேலாளராகப் பணியாற்றி வந்த 32 வயது இளம்பெண் அஞ்சிதா, தனது தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பீளமேடு பகுதியில் உள்ள விமான நிலையக் குடியிருப்பு வீட்டில் தனியாக வசித்து வந்தார். நீண்ட நேரமாகியும் அவர் பணிக்கு வராததால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அஞ்சிதா தனது குடும்பத்தினருக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு விசித்திரமான செய்தியை அனுப்பியுள்ளார். அதில் தனது வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்போர்ட் மற்றும் தனது செல்போனைத் திறப்பதற்கான லாக் எண்கள் ஆகியவற்றைத் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லாத நிலையில், போலீசார் கதவை உடைத்துச் சென்று அவரது உடலை மீட்டனர்.

நீண்ட காலமாகத் திருமணம் ஆகாதது மற்றும் பணிச்சுமை காரணமாக அஞ்சிதா கடந்த சில நாட்களாகக் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்துப் பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒரு திறமையான பெண் அதிகாரியின் இந்தத் திடீர் முடிவு விமான நிலைய ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.