கோவை சிறுமி கொலை வழக்கு... மிகக் கடுமையான தண்டணை வழங்கப்படும்...  முதல்வர் விஜய்  ஆவேசம்! 

 

கோயம்புத்தூரில் பத்து வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரக் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த மனிதநேயமற்ற செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் விஜய் இதுகுறித்து உடனடியாக அறிக்கை ஏதும் வெளியிடாமல் மௌனம் காத்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.

குழந்தையை இழந்து வாடும் அச்சிறுமியின் உறவினர்கள், தங்களுக்கு நீதி கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் ஏன் மௌனமாக இருக்கிறார் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பினர். உறவினர்களின் இந்த ஆதங்கக் குரல் ஒலித்த சில மணி நேரங்களிலேயே, முதல்வர் விஜய் இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இக்கொடூரச் சம்பவம் தனக்கு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்றும், குழந்தையைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், தீவிர விசாரணை மேற்கொண்டு உடனடியாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.