கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு... சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கோவை குற்றாலம் அருவி கோவையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழை நீர் ஓடைகளின் வழியாக வழிந்தோடி இந்த அருவிக்கு வருகிறது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்வது வழக்கம்.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாகவே இந்த அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் வனத்துறையினரும் அருவிப் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே நேற்று கோவை குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் திடீரென கனமழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அருவியில் நீர்வரத்து அபாயகரமான அளவிற்கு அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. மழையின் வேகம் குறைந்து வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்த பிறகு சுற்றுலாப் பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கோவை மாநகரின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.