கோவையில் முதியவர் வெட்டிக் கொலை... தொடரும் கொலைச் சம்பவங்களால் பொதுமக்கள் பீதி!
கோவை ஆலந்தரையை அடுத்த வெள்ளிமலை பட்டினத்தைச் சேர்ந்த நாகராஜ் (60) என்ற முதியவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தகவலறிந்து சென்ற ஆலந்தரை போலீசார் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரைப் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் நண்பர்கள் என்பதால் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் தற்போது போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முழுமையாக முடிந்த பின்பே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில், ஆகஸ்ட் 4-ம் தேதி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்; ஆகஸ்ட் 6-ம் தேதி அஸ்வின் என்ற இளைஞர் சுத்தியலால் தாக்கி கொலை செய்யப்பட்டார். ஆகஸ்ட் 10-ம் தேதி கல்லூரி மாணவரான அமுதன் (19) என்பவர் சக மாணவர் குழு மோதலால் அடித்துக் கொல்லப்பட்டார் மற்றும் சாந்தி (58) என்ற பெண்மணி வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மேலும் கோவையில் வெவ்வேறு தனிப்பட்ட காரணங்களினால் மேலும் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் ஒரு கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 28 நாளில் மட்டும் கோவை மாவட்டத்தில் மொத்தம் 8 கொலைகள் நடந்துள்ளது பொதுமக்களிடையே கடும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டக் கோரி பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் காவல்துறையினரின் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.