கோவில்பட்டியில் 16 வயது சிறுவனை  கடத்தி பணம் கேட்டு தாக்கிய இளைஞர்கள்!  

 

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 16 வயது சிறுவனை மிரட்டி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவில்பட்டி ராஜீவ் நகரில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த 16 வயது சிறுவனை, 4 பேர் மிரட்டி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. பின்னர் அந்தச் சிறுவனிடம் பணம் கேட்டு அவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அவர்களிடமிருந்து தப்பித்த சிறுவன் அங்கிருந்து ஓடியுள்ளார். அப்போது, அந்த நபர்கள் சிறுவனுக்குக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டுச் சென்றதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறுவன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் யுவன் பாரத் (21), மாடசாமி (21), சூர்யா (19), ஆனந்த் (20) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.