மக்கும் குப்பைகளில் இருந்து 21 டன் இயற்கை உரம் தயாரிப்பு... விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம்!
மக்கும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட 21 மெட்ரிக் டன் இயற்கை உரத்தை கோவில்பட்டி சுற்றுவட்டார விவசாயிகளுக்கு நகராட்சி நிர்வாகம் இலவசமாக வழங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் எனத் தரம் பிரிக்கப்படுகின்றன. இதில் காய்கறிக் கழிவுகள் உள்ளிட்ட மக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்து இயற்கை உரமாக மாற்றுவதற்காக நகராட்சியின் சார்பில் 5 இடங்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
வீரவாஞ்சிநகர், சுப்பிரமணியபுரம், கூடுதல் பேருந்து நிலையத்தின் பின்புறம், பார்க் ரோடு மற்றும் புதுக்கிராமம் ஆகிய இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
21 டன் இயற்கை உரம் இலவசம்
இந்த மையங்களில் ஒன்றான புதுக்கிராமத்தில் தயாரிக்கப்பட்ட 21 மெட்ரிக் டன் இயற்கை உரம், கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளம் அதிகரிப்பதுடன், பயிர்களின் வளர்ச்சியும் மேம்பட்டு அதிக மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் உரத்தை வாங்கிச் சென்றனர். டிராக்டர்களில் உரத்தை ஏற்றிச் சென்றனர்.
குப்பைகளைப் பயனுள்ள இயற்கை உரமாக மாற்றுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், விவசாயிகளுக்கும் பயன் கிடைக்கிறது. எனவே, இயற்கை உரம் தேவைப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தை நேரில் அணுகி உரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என நகராட்சி பொது சுகாதாரப் பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.