கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு தீபாவளி ஸ்பெஷல்! புதிதாக 4 சுவைகள் அறிமுகம்
கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு தீபாவளி ஸ்பெஷல்! புதிதாக 4 சுவைகள் அறிமுகம்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டியில் புதிதாக நான்கு வகை கடலை மிட்டாய்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாரம்பரிய சுவையுடன் வித்தியாசமான உணவுப் பொருட்களைச் சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த மிட்டாய்கள், பரிசுப் பெட்டகங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
கரிசல் மண்ணின் மணத்துடன் தயாரிக்கப்படும் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு 2020-ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதனால் இந்த மிட்டாய்க்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனி வரவேற்பு கிடைத்துள்ளது.
என்னென்ன புதிய சுவைகள்?
இந்த ஆண்டு தீபாவளிக்காக கருப்பு கவுனி அரிசி, கடல்பாசி, நாட்டுச்சோளம், பாசிப்பயறு ஆகியவற்றைப் பயன்படுத்தி நான்கு புதிய வகை கடலை மிட்டாய்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே ரோஜா இதழ், மிக்ஸ்டு நட்ஸ், முருங்கைக்கீரை, பூசணி விதை, பாதாம், முந்திரி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார் அரிசி உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் கடலை மிட்டாய்கள் தயாரிக்கப்படுகின்றன.
ரூ.300 முதல் பரிசுப் பெட்டகங்கள்
கடலை மிட்டாய்களுடன் கோவில்பட்டியின் மற்றொரு சிறப்புப் பண்டமான காரச்சேவும் சேர்த்து பரிசுப் பெட்டகங்கள் தயாரிக்கப்படுகின்றன. கிப்ட் பாக்ஸ் மற்றும் சிறிய வாளி வடிவிலான பரிசுத் தொகுப்புகள் என இரண்டு வகைகளில் இவை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலை ரூ.300 முதல் ரூ.800 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கும் தீபாவளிப் பரிசுகளில் கோவில்பட்டி கடலை மிட்டாயையும் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றன. அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் கிடைப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.