சிக்கன் பிரியர்கள் அதிர்ச்சி... தமிழகம் முழுவதும் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம் ... 60,000 கடைகள் அடைப்பு!

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 31-ஆம் தேதி முதல் பிராய்லர் கோழி விற்பனையை முழுமையாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் அவசரச் செயற்குழு கூட்டத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. கோழிப் பண்ணைகளில் கறிக்கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை உற்பத்தியாளர்கள் முறையாக அமல்படுத்தாததே இதற்குக் காரணமாகும். இதனால் இரு மாநிலங்களிலும் சுமார் 60,000 சிக்கன் கடைகள் மூடப்பட்டு மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.

பண்ணைகளில் இருந்து விற்பனைக்கு அனுப்பப்படும் கோழிகளுக்குக் குறைந்தது 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும். ஆனால் அதிக லாப நோக்கில் தீவனம் வழங்கப்படுவதால், கோழியின் வயிற்றில் செரிக்காத தீவனம் தேங்கி எடை கூடுதலாகக் காட்டப்படுகிறது. விற்பனைக்கு வரும் வழியில் கழிவுகள் வெளியேறிச் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, வாடிக்கையாளர்களுக்குப் பண விரயமும் சுத்தமற்ற கறியும் கிடைக்கிறது. இந்த எடை மோசடியைத் தடுத்து நிறுத்தக் கோரியே கறிக்கோழி விற்பனையாளர்கள் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

தீவனக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை அரசு அதிகாரிகளுக்குத் தெளிவாக அறிவுறுத்தி, சட்டமாக மாற்ற வேண்டும் எனப் பண்ணையாளர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டுத் தீர்வு காணாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ஆம் தேதி முதல் கடைகள் அடைக்கப்படுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கறிக்கோழிக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.