திருச்சி கிழக்கில் போட்டியிடும் கு.ப.கிருஷ்ணன்?! பட்டினப்பாக்கத்தில் விஜய்யுடன் சந்திப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய், விரைவில் தனது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய உள்ளார். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த தேர்தலில் லால்குடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட கு.ப.கிருஷ்ணன், அதிமுக வேட்பாளர் லீமா ரோஸிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இருப்பினும், கட்சியின் மூத்த நிர்வாகி மற்றும் அனுபவம் வாய்ந்தவர் என்பதால், விஜய் ராஜினாமா செய்யப்போகும் திருச்சி கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் அவரைப் போட்டியிட வைக்கக் கட்சித் தலைமை பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள தனது பட்டினப்பாக்கம் இல்லத்தில் விஜய் இன்று அமைச்சரவை பட்டியல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, கு.ப.கிருஷ்ணன் நேரில் சென்று விஜய்யைச் சந்தித்துப் பேசியுள்ளது இந்த யூகங்களை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
எம்.எல்.ஏ-வாக இல்லாத நிலையிலும், இடைத்தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் அவருக்கு அமைச்சரவையில் ஏதேனும் முக்கியப் பொறுப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
விஜய் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதி என்பதால், அங்குத் தவெக-விற்குக் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. அதனைப் பயன்படுத்தி கு.ப.கிருஷ்ணனைச் சட்டமன்றத்திற்குள் கொண்டு வர அக்கட்சித் தலைமை வியூகம் வகுத்து வருகிறது.