கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்: வீட்டில் பூஜை செய்யும் முறை, நல்ல நேரம். வழிபாட்டு முறைகள்!

 

ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் இணையும் நன்னாளில் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தியன்று, இல்லங்களில் பகவானை வரவேற்று சிறப்பு பூஜைகள் செய்யும் முறை குறித்து ஆன்மீகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோகுலாஷ்டமி திருநாளில் வீட்டைச் சுத்தப்படுத்தி, வாசலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையை மலர்களால் அழகாக அலங்கரிக்க வேண்டும். வாசலில் இருந்து பூஜை அறை வரை அரிசி மாவினால் குழந்தையின் சிறிய பாதச் சுவடுகளைப் பதித்து, கண்ணனை வீட்டிற்கு அன்போடு அழைக்க வேண்டும்.

வீட்டில் உள்ள குழந்தைகளுக்குக் கிருஷ்ணர் மற்றும் ராதை போன்ற வேடங்களை அணிவித்து மகிழ்விக்கலாம். குழந்தைகளின் இந்த மகிழ்ச்சியைக் கண்டு கண்ணன் அருள் புரிவான் என்பது ஐதீகம்.

பகவானுக்கு மிகவும் பிடித்தமான வெண்ணெய், பால், தயிர், அவல், பால் பாயசம், லட்டு, முறுக்கு, சீடை மற்றும் அதிரசம் போன்ற பலகாரங்களைப் படைத்து வழிபடலாம். வசதி குறைந்தவர்கள் சிறிதளவு வெண்ணெய் மற்றும் வெல்லம் கலந்த அவலை மட்டுமே நைவேத்யமாகப் படைக்கலாம்.

பூஜையின்போது கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான துளசி இலைகளைச் சமர்ப்பித்து அர்ச்சனை செய்ய வேண்டும். 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்னும் மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்து, கிருஷ்ண அஷ்டோத்திரம் மற்றும் போற்றி மந்திரங்களைப் பாராயணம் செய்து தீபாராதனை காட்ட வேண்டும்.