கிருஷ்ணஜெயந்தி சிறப்புகள், பலன்கள், வழிபடும் முறைகள்!

 

ஜோதிட வல்லுனர்கள் பொதுவாக அஷ்டமி, நவமி நாளில் நல்ல காரியங்களை தொடங்க வேண்டாம் என்கின்றனர். ஆனால், ராமர் நவமியில் அவதரித்ததால் இராமநவமியையும், கிருஷ்ணர் அஷ்டமியில் அவதரித்ததால் கோகுலாஷ்டமியையும் கொண்டாடுகிறோம்.

மஹாவிஷ்ணு, எளியவர்களின் துயர் துடைக்கவும், அவர்களை தீயவர்களிடமிருந்து காக்கவும் ஆவணி மாதத்தில் நள்ளிரவில் தேய்பிறை அஷ்டமி திதியில் ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்தார். இந்தியா முழுவதும் இந்த தினத்தை கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என பலவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

கோகுலாஷ்டமி தினத்தில் ஸ்ரீகிருஷ்ண பகவானை வழிபடுபவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும். இதன் அடையாளமாக சின்னஞ்சிறு பாதத்தை வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை கோலமாக வரைந்து வழிபடுகிறோம். கோவில்களில் உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல் போன்ற விளையாட்டுகளும் கோலாகலமாக நடத்தப்படும்.