இன்று முதல் 120 நாட்களுக்கு கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு | 9,012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்!

 

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து முதல் போக பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளின் விவசாய நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து 2026-27 ஆம் நிதியாண்டின் முதல் போக பாசனத்திற்காக, வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்கள் வழியாக இன்று ஜூலை 16ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

நீர்த்தேக்கத்தின் நீர் வரத்து மற்றும் இருப்பைப் பொறுத்து, ஜூலை 16 முதல் நவம்பர் 12, 2026 வரையிலான 120 நாட்களுக்கு மொத்தம் 1,563 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடத் தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இந்தத் தண்ணீர் திறப்பின் மூலம் கிருஷ்ணகிரி வட்டம் மற்றும் மாவட்டத்திலுள்ள சுமார் 9,012 ஏக்கர் விளைநிலங்கள் நேரடியாகப் பாசன வசதி பெறவுள்ளன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், நீரைப் போதிய அளவில் சிக்கனமாகப் பயன்படுத்தி நெல் உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்யுமாறு வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.