கிருஷ்ணகிரியில் பயங்கரம்: ஊர் பஞ்சாயத்தில் அனைவர் முன்னிலையிலும் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்; காவல் நிலையத்தில் சரண்!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, குடும்பத் தகராறு காரணமாக ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து பேசிக் கொண்டிருந்த போதே, ஆத்திரமடைந்த கணவன் தனது மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் எல்லையோர கிராமத்தில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் உனுசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (30) என்ற கூலித்தொழிலாளிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா, மாடக்கல் ஊராட்சியைச் சேர்ந்த மல்லிகைபாய் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த சுஷ்மிதா (24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவனுடன் கோபித்துக் கொண்ட சுஷ்மிதா, மல்லிகைபாய் தொட்டி கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று (ஜூன் 28, ஞாயிற்றுக்கிழமை) மதியம் ராஜேஷ், அவரது தந்தை கோவிந்தப்பா, தாயார் கெம்பம்மா மற்றும் அவர்களது ஊரைச் சேர்ந்த பெரியவர்கள் சுமார் 30 பேருடன் சுஷ்மிதாவை சமாதானம் பேசி மீண்டும் குடும்பம் நடத்த அழைத்துச் செல்வதற்காக மல்லிகைபாய் தொட்டி கிராமத்திற்கு வந்துள்ளனர்.

சுஷ்மிதாவின் வீட்டின் முன்பு இருதரப்பினரும் அமர்ந்து ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பஞ்சாயத்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மீண்டும் கணவன், மனைவி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை முற்றி இருவருக்கும் இடையே மோதல் போக்கு உருவான நிலையில், ஆத்திரமடைந்த ராஜேஷ் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து, அனைவரின் கண் முன்னிலையிலேயே சுஷ்மிதாவின் கழுத்தில் ஆவேசமாகக் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுஷ்மிதா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஊர் மக்கள் சூழ்ந்திருந்த போதே இந்தக் கொலையை அரங்கேற்றிவிட்டு, ராஜேஷ் அங்கிருந்து தப்பியோடினார். தமிழக-கர்நாடக எல்லையோர பகுதி என்பதால், அண்டை மாநிலமான கர்நாடகாவிற்குள் நுழைந்த ராஜேஷ், அங்குள்ள கோடள்ளி காவல் நிலையத்தில் பயந்துபோய் தஞ்சமடைந்து சரணடைந்தார். இதையடுத்து, கர்நாடகப் போலீசார் சுஷ்மிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் தமிழகத்தின் தளி  காவல் நிலைய போலீசாருக்குத் தகவல் கொடுத்து, கொலையாளி ராஜேஷை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

தளி போலீசார் ராஜேஷை முறைப்படி கைது செய்து, சுஷ்மிதாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஊர் பெரியவர்கள் முன்னிலையிலேயே பெண் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.