காலி மதுபாட்டிலுக்கு ₹10 கேட்ட இளைஞர்... கல்லால் அடித்துக் கொலை!  

 

கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடையில் காலி மதுபாட்டிலை திரும்ப கொடுத்ததற்கான ₹10 பணத்தை கேட்டதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. 33 வயது தனியார் நிறுவன ஊழியர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 24 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான CCTV காட்சிகளும் வெளியாகியுள்ளன.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார், 33. இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் வேளாண் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு தனது நண்பர்களுடன் கிருஷ்ணகிரி அருகே ஆர்.பூசாரிப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார்.

கிருஷ்ணகிரி அருகே இளைஞர் கல்லால் அடித்துக்கொலை https://t.co/u92eDfSks5 #kirishnagiri #murder #police #thanthitv

— Thanthi TV (@ThanthiTV) September 19, 2026

அங்கு மது அருந்திய பின்னர், காலி மதுபாட்டிலை கடையில் திரும்ப கொடுத்த அருண்குமார், அதற்கான ₹10 பணத்தை கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது கடையில் இருந்த கோவிந்தராஜ், 48, மற்றும் அவரது மகன் கார்த்திக், 24, ஆகியோருக்கும் அருண்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து அருண்குமார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால், கார்த்திக் அவரை சுமார் 50 மீட்டர் தூரம் பின்தொடர்ந்து சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அப்போது அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்த கார்த்திக், அருண்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கிருஷ்ணகிரி போலீசார், அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை சம்பவம் நடைபெற்ற விதம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.காலி மதுபாட்டிலுக்கு வழங்கப்படும் ₹10 பணம் தொடர்பான தகராறு இவ்வளவு பெரிய குற்றச்சம்பவத்தில் முடிந்திருப்பது கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.