வீட்டிற்குள் புகுந்து பின்னிக் கொண்டு ஆடிய பாம்புகள்... பரபரப்பு வீடியோ!

 

கிருஷ்ணகிரி சத்யசாய்நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சாகுல் ஹமீது என்பவரது வீட்டிற்குள் நேற்று திடீரென 2 சாரை பாம்புகள் புகுந்தன. வீட்டிற்குள் நுழைந்த அந்த 2 சாரை பாம்புகளும் சிறிது நேரத்தில் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டு நடனமாடத் தொடங்கின. இந்த விசித்திரக் காட்சியைக் கண்ட சாகுல் ஹமீது குடும்பத்தினர் அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டனர்.

உடனடியாக சாகுல் ஹமீது குடும்பத்தினர் உள்ளூர் தீயணைப்புத் துறையினருக்கு இந்த விபரீதச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் சுமார் 7 அடி நீளம் கொண்ட அந்தப் பாம்புகளில் ஒரு பாம்பைச் சாதுரியமாகப் பிடித்தனர். ஆனால் மற்றொரு சாரை பாம்பு அங்கிருந்து தப்பியோடி வனப்பகுதிக்குள் மறைந்துவிட்டது.

தொடர்ந்து வீரர்கள் நடத்திய சோதனையில், அதே வீட்டின் வாசல் அருகே பதுங்கியிருந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஒன்றையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பிடிபட்ட 2 பாம்புகளும் பாதுகாப்பாக அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டன. பொதுவாகக் காடுகளில் மட்டுமே நடக்கும் பாம்புகளின் நடன நிகழ்வு, மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நடந்த சம்பவம் அக்கம் பக்கத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.