குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியார் மயமாகிறது: மத்திய அரசு நடவடிக்கை!

 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் கட்டப்பட்டு வரும் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை மத்திய அரசின் விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையமான இன்-ஸ்பேஸ் தொடங்கியுள்ளது.

சுமார் ரூ. 986 கோடி மதிப்பில் 2,233 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் இச்சிறிய ரக செயற்கைக்கோள் ஏவுதளத்தைச் செயல்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் தகுதியான இந்தியத் தனியார் நிறுவனங்களிடமிருந்து விருப்ப வெளிப்பாடு கோரப்பட்டுள்ளது.

புதிய தனியார் நிறுவன நிர்வாகத்திற்குத் தடையற்ற மாற்றத்தை உறுதி செய்ய, இஸ்ரோ தொடக்கத்தில் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல், பயிற்சி மற்றும் செயல்பாட்டு உதவிகளை வழங்கும்.

விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், வணிக ரீதியிலான செயற்கைக்கோள் ஏவுதல்களை வேகப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நாட்டின் முக்கிய பாதுகாப்பு மற்றும் விண்வெளிச் சொத்தாகக் கருதப்படும் ஏவுதளத்தின் முழு நிர்வாகத்தையும் தனியாரிடம் ஒப்படைப்பது குறித்துப் பல விண்வெளி விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.