குல்காம் என்கவுன்டர்... லஷ்கர் தளபதி லத்தீப் பட் உட்பட 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த லத்தீப் பட் மற்றும் அவரது கூட்டாளி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த நவம்பர் 11-ம் தேதி குல்காம் மாவட்டம் மிர் பஜார் அருகே உள்ள அக்ரான் பகுதியில் சிஆர்பிஎப் சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, கிஷ்த்வார் மாவட்டத்தில் சிறப்பு போலீஸ் அதிகாரிகளான பாபி சந்த், ரஷ்பால் குமார் ஆகிய இருவர் காணாமல் போன நிலையில், பின்னர் துப்பாக்கிக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவத்திலும் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், குல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் லத்தீப் பட் மற்றும் அவரது கூட்டாளி கொல்லப்பட்டனர். சிஆர்பிஎப் மீதான தாக்குதலில் லத்தீப் பட்டுக்கு தொடர்பு இருப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் சந்தேகித்திருந்தன. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.