காஷ்மீரில் சிஆர்பிஎப் சோதனைச் சாவடி மீது திடீர் தாக்குதல்… 3 வீரர்கள் காயம்!

 

 

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குல்காம் மாவட்டத்தின் மிர் பஜார் பகுதியில் புதன்கிழமை பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) வீரர்களைக் குறிவைத்து திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒருவர் நிலை கவலைக்கிடம்

இந்தத் தாக்குதலில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு வயிற்றுப் பகுதியில் குண்டு காயம் ஏற்பட்டதால் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற இருவருக்கும் கை மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் அனந்த்நாக் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தாக்குதல் நடந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து, தப்பியோடியவர்களைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.