‘கும்பமேளா அழகி’ மோனாலிசா கணவர் மீது போக்சோ வழக்குப்பதிவு - கைது செய்ய போலீசார் தீவிரம்!

 

சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட 'கும்பமேளா அழகி' மோனாலிசாவின் கணவர் ஃபர்மான் கான் மீது, மைனர் பெண்ணைத் திருமணம் செய்ததாகப் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மோனாலிசா, கடந்த மார்ச் 11ம் தேதிகேரளாவில் உள்ள ஒரு கோவிலில் தனது காதலரான ஃபர்மான் கானை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் மதங்களைக் கடந்த காதல் திருமணம் என மோனாலிசா விளக்கம் அளித்திருந்த நிலையில், தற்போது வயது தொடர்பான விவகாரத்தில் அவரது கணவர் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளார்.

தேசிய பழங்குடியினர் ஆணையம் (NCST) நடத்திய விரிவான விசாரணையில், திருமணத்தின் போது மோனாலிசாவிற்குச் சட்டப்பூர்வமான திருமண வயது எட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது: மகேஷ்வர் அரசு மருத்துவமனை ஆவணங்களின்படி, மோனாலிசா கடந்த டிசம்பர் 30, 2009 அன்று பிறந்துள்ளார். இதன் அடிப்படையில், கடந்த மாதம் திருமணம் நடந்தபோது மோனாலிசாவிற்கு வயது 16 மட்டுமே. இதனால் இது சட்டப்படி மைனர் திருமணமாகக் கருதப்படுகிறது.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில், மத்தியப் பிரதேசத்தின் மகேஷ்வர் காவல் நிலையத்தில் ஃபர்மான் கான் மீது கீழ்க்கண்ட சட்டப்பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது: மைனர் பெண்ணைத் திருமணம் செய்ததற்காக  பாரதிய நியாய சன்ஹிதா (BNS) கடத்தல் மற்றும் சட்டவிரோதத் திருமணம் தொடர்பான பிரிவுகள், போக்சோ சட்டம், எஸ்சி/எஸ்டி சட்டம் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகள் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சட்டப்பூர்வ நடவடிக்கையாக மாறியுள்ளது. ஃபர்மான் கானை கைது செய்யப் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.