கும்பமேளா புகழ் மோனலிசா காதல் திருமணம்... பெற்றோர் எதிர்ப்பால் காவல்நிலையத்தில் புகார்!
நாடு முழுவதும் ஒரே வீடியோவில் வசீகரித்தவர் மோனலிசா. ஓவர் நைட்டில் உலகம் முழுவதுமே இவரது வசீகரமும், சிரிப்பும் வலம் வந்தது. பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவின் போது தனது வசீகரப் புகைப்படங்களால் இணையத்தில் கோலோச்சி ‘சென்சேஷன்’ ஆன மோனலிசா போஸ்லே, தனது காதலனைத் மதம் கடந்து திருமணம் செய்துகொண்டு, பாதுகாப்பு வேண்டி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கடந்த மகா கும்பமேளாவின் போது எடுக்கப்பட்ட மோனலிசாவின் புகைப்படங்கள் வைரலானதை அடுத்து, இந்தியா முழுவதும் பிரபலமானார் மோனலிசா போஸ்லே. இணையதளவாசிகளின் 'கிரஷ்' ஆக வலம் வந்த இவர், தற்போது தனது நீண்ட நாள் காதலரான பர்மான் கான் என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
மோனலிசா போஸ்லே மற்றும் பர்மான் கான் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு மோனலிசாவின் குடும்பத்தினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தினர் இவர்களது திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் மார்ச் 11ம் தேதி கேரளாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோயிலில், இந்து முறைப்படி இருவரும் மாலை மாற்றித் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு, மோனலிசா தனது கணவர் பர்மான் கானுடன் கேரளக் காவல்துறையினரை அணுகிப் பாதுகாப்பு கோரியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள புகாரில், "நான் படப்பிடிப்பிற்காகக் கேரளா வந்திருந்த போது, எனது தந்தை மற்றும் உறவினர்கள் என்னைக் கண்டுபிடித்து வலுக்கட்டாயமாகச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். நான் எனது விருப்பப்படி பர்மான் கானைத் திருமணம் செய்துகொண்டேன். அவருடன் வாழவே நான் விரும்புகிறேன். எனது குடும்பத்தினரால் எங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால் எங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கும்பமேளாவின் போது பாரம்பரிய உடையில் ஜொலித்த மோனலிசா, இப்போது தனது திருமணப் படங்களைப் பகிர்ந்துள்ளார். ஒருபுறம் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தாலும், மதம் கடந்த இவர்களது திருமணம் குறித்த விவாதங்களும் இணையத்தில் சூடுபிடித்துள்ளன.